திருமணத் தடை நீக்கும் நவாஹ பாராயணம்!
கம்ப ராமாயணத்திலுள்ள சுந்தர காண்டத்தை ஒன்பது நாட்கள் தொடர்ந்து பாராயணம் செய்துவந்தால் விரைவில் திருமணத் தடை நீங்கும் மற்றும் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது ஐதீகம். இவ்வாறு ஒன்பது நாட்கள் பாராயணம் செய்வதை, ‘நவாஹ பாராயணம்’ என்பர். சுந்தர காண்டம் மொத்தம் 68 ஸர்க்கங்களைக் (பிரிவுகள்) கொண்டது. இவற்றைப் பாராயணம் செய்யும் முறை மற்றும் அப்போது செய்ய வேண்டிய நிவேதனங்கள் குறித்துக் காண்போம்.
முதல் நாள் 1 முதல் 5 ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். அப்போது சர்க்கரைப் பொங்கல் நிவேதம் செய்ய வேண்டும். இரண்டாம் நாள் 6 முதல் 15 வரையுள்ள ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். நிவேதனமாக பாயசம் மற்றும் கோதுமை அப்பம் சிறப்பு.
மூன்றாம் நாள் 16 முதல் 20 வரையிலான ஸர்க்கங்களை பாராயணம் செய்யலாம். இன்று எள் சாத நிவேதனம் உகந்தது. நான்காம் நாள் 21 முதல் 26 வரையான ஸர்க்கங்கள் பாராயணம் செய்ய வேண்டும். இன்று தேன் குழல் மற்றும் முறுக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.
ஐந்தாம் நாள் 27 முதல் 33 வரையிலான ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். இன்று தயிர் சாதம் நிவேதனம் செய்வது சிறப்பு. ஆறாம் நாள் 34 முதல் 40 வரையான ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். இன்று மோதகம் நிவேதனம் உசிதம்.
ஏழாம் நாள் 41 முதல் 52 வரையிலான ஸர்க்கங்கள் பாராயணம் செய்ய வேண்டும். இன்று முக்கனிகளான மா, பலா, வாழையை நிவேதனம் செய்தல் விசேஷம். எட்டாம் நாள் 53 முதல் 60 வரையான ஸர்க்கங்களை பாராயணம் செய்ய வேண்டும். இன்று வெண்பொங்கல் நிவேதனம் சிறப்பு. ஒன்பதாம் நாள் 61 முதல் 68 வரையிலான ஸர்க்கங்களை பாராயணம் செய்து முடிக்க வேண்டும். இன்று பால் பாயசம் நிவேதனம் விசேஷம்.
இப்படி சுந்தர காண்ட ஸர்க்கங்களைப் பாராயணம் செய்யும் முன்னர் ஒவ்வொரு நாளும் பாலும் கல்கண்டும் நிவேதனம் செய்ய வேண்டும். முடித்த பின்னர் மேற்சொன்ன நிவேதனங்களைச் செய்யலாம்.
நந்தியெம்பெருமானின் தத்துவம் தெரியுமா?
நந்தியின் உருவமைப்பே தத்துவக் குவியல். சரியை, கிரியை, யோகம் என்ற மூன்று கால்களையும் மடித்து ஒடுக்கி, நான்காம் காலான ஞானப் பாதத்தினால் பரம்பொருளை வணங்கிக் கொண்டிருக்கிறது என்கின்றன ஆகம நூல்கள். ‘நந்துதல்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்துதான் நந்தி என்ற சொல் வந்தது. ‘நந்துதல்’ என்றால் மேலேறிச் செல்லுதல் எனவும் பொருளுண்டு. ஒரு யோகி பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரக் கனலை எழுப்பும் அமைப்பும் நந்தியிடம் உண்டு. ஔவையார் கூட தனது விநாயகர் அகவலில், ‘மூலாதாரத்தின் முண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறிவித்து’ எனும் வரிகள் நந்தியெம்பெருமானை நினைவுறுத்தும். நந்தியின் துணையால் மேலேறிச் சென்று ஈசனைக் காண வேண்டும் என்பதே இதன் முழுப்பொருள். நந்தியின் அருளில்லாது ஈசனைக் காண இயலாது என்கின்றன சைவ ஆகமங்கள்.
நமஸ்கார – அத்தாழ பூஜையின் சிறப்பு!
குருவாயூரில் தினமும் பகலிலும் இரவிலும் பகவானுக்கு நைவேத்தியம் செய்த அன்னத்தை சமாராதனை நடத்துவதற்கு, ‘நமஸ்கார – அத்தாழ பூஜை’ என்று பெயர். இப்படிப் பகலில் செய்யப்படும் சமாராதனைக்கு, ‘நமஸ்காரமெ’ன்றும், இரவில் செய்யப்படும் சமாராதனைக்கு, ‘அத்தாழம்’ என்றும் பெயர். இவற்றைச் செய்வதாகப் பிரார்த்தித்துக்கொண்ட பக்தர்கள் குறிப்பிட்ட தொகையை ஆலய தேவஸ்தானத்தில் செலுத்தினால் போதும். கோயில் நிர்வாகமே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துத் தரும்.
பூஜை முடிந்ததும் பணம் செலுத்தியவர் சார்பில் அன்னமளிப்பு நடைபெறும். தினமும் காலையில் 8 மணிக்குள்ளாக பந்தீரடி பூஜை வேளையில் நடைபெறும் நைவேத்தியத்தை, ‘நாழி அரிசி நைவேத்தியம்’ என்று செல்வார்கள். இதில் பகவானுக்கு நைவேத்தியம் செய்ததை சாதுக்களுக்கு அன்னதான பிரசாதமாக அளிப்பதுண்டு. இந்த பூஜை வேளையில் நடத்தப்படும் மற்றொரு வழிபாடு பால் பாயசம், பாலடை பிரதமன் மற்றும் வெண்ணெய் படைப்பது.
ஆதியில் குரு பகவான் இத்தலத்தில் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்தவுடன் காமதேனுவை வரவழைத்து அதன் மூலம் உண்டான பாயசத்தை நைவேத்தியம் செய்தாராம். அதனால் இன்றளவும் குருவாயூரப்பனுக்கு பால் பாயசம் மற்றும் வெண்ணெய் முதலானவற்றில் பிரியம் அதிகம் என்பது ஐதீகம்.